Saturday, August 28, 2010

பெருந்தன்மை

ஒருவர் எப்பொழுது பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்று நாம் விரும்புகின்றோமோ, அப்பொழுது அவர் அப்படி நடந்து கொள்வதில்லை ! 

எப்பொழுது பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகின்றாரோ அப்பொழுதுதான் அப்படி நடந்து கொள்கிறார் !

Friday, August 27, 2010

தோல்வி !

எது நம்மை அதிகம் வருத்தும்?

நம்முடைய தோல்வியா?
நமக்கு முன்மாதிரி என்று நாம் நினைப்பவரின் தோல்வியா?

இரண்டாவதே!

Thursday, May 27, 2010

அவள்

அவளுக்கு எனவொன்றை
ஆசையாய் வாங்குகையில்
இதயத்தில் எங்கும்
ஈடில்லா உற்சாகம் !

உயிரின்றி இயங்காத
ஊன்போல் நானவளின்றி !
எனக்கான செல்வமாய்
ஏழிசையில் மெல்லிசையாய்

ஐந்திணையில் சிந்தனையாய்
ஒருத்தியவள் போதுமென்று
ஓர்நாள் கூறுகையில்
ஒளவியம்தான் கொண்டாள் அவளுடைய தோழி !

Sunday, May 23, 2010

காதல்

தெய்வீகமானது, புனிதமானது என்று 
விளக்க முயற்சித்த அதிமேதாவிகளைச் சாதாரணமாகத் தோற்கடித்திருக்கிறது !
விளக்கவே முடியாது என்று சொல்பவர்களையும் சேர்த்தே !
அதை விளக்க ஒரு வரியில்லை, ஒரு வார்த்தை கூட மிகையே !

Thursday, May 20, 2010

கடவுள்

யார் சொன்னது கடவுள் இல்லையென்று?


நான் பார்த்திருக்கிறேன் கடவுளை, நான் குறிப்பிடுவது "அன்பே வெங்கடாசலம்" கடவுளையல்ல.


மேலும் பத்து நிமிடம் தாமதாமானால், மிகப்பெரிய இழப்பு என்ற தருணத்தில், எட்டாவது நிமிடத்தில் தூர வளைவில் திரும்புமே அந்த வண்டி, அது கடவுள் ! 


தொடர்ந்து பத்து நாள் அரிசி உணவே உண்ணாமல், பதினொன்றாவது நாள் உண்ணும் அந்த சாதமும் சாம்பாரும், அது கடவுள் !


தொடர்ந்து நான்கு நாள் தண்ணீரே குடிக்காமல், பழச்சாறும் குளிர்பானமுமாய்க் குடித்து விட்டு ஐந்தாம் நாள் குடிக்கும் ஒரு குவளை தண்ணீர், அது கடவுள் !



மணிக்கணக்காய் வராமலிருந்து வெக்கை தாங்க முடியாமல் பச்சைக்குழந்தை அழும்போது திடீரென வந்து காற்றாடியை இயக்கும் அந்த மின்சாரம், அது கடவுள் !


தொடர்ந்து சில மணி நேரங்கள் இசையை ரசித்து விட்டு பின் அதை நிறுத்தியவுடன் நிகழும் சிறு அமைதி, அது கடவுள் !


காதலர்கள் மணிக்கணக்கில் வாய் கிழியப் பேசிக் கொண்டு இருக்கும்போது அவர்கள் இடையில் நிகழும் சில நொடி மெளனம், அது கடவுள் !



நமக்கு உலகிலேயே மிக முக்கியமான மனிதருக்கு, உயிர் காக்கும் உதவி புரிந்த ஒவ்வொன்றும் கடவுள் !




அவ்வளவு ஏன், இதை எழுதிய நானும் சரி படிக்கின்ற நீங்களும் சரி, யாரோ ஒருவருக்கு ஏதோவொரு சமயத்திலாவது கடவுளே ! 


பி.கு: இதைச் சிறுவரிகளாகவோ, கவித்துவமாகவோ எழுத முயற்சிக்கக்கூட இயலவில்லை. இதை ஒரு (உண்மைக்) கதையாகக் கருதவும். உலகே உணர்ந்தது என்பதால் இதில் தாயைச் சேர்க்கவில்லை.

Monday, May 17, 2010

ஆசைகள் !

ஒன்றல்ல இரண்டல்ல பன்னிரண்டு சொல்கிறேன் இப்போதே !

மீண்டும் உன் மடி சாய்ந்து உறங்க
மீண்டும் நீ சமைத்ததை ஒரு நாளைக்கு நான்கு முறை உண்ண
மீண்டும் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேச
மீண்டும் நீ என் முதுகில் தட்டித் தூங்க வைக்க

ஒரு நாளாயினும் நான் உனக்குச் சமைக்க
ஒரு ஞாயிறேனும் உனக்கு முன் நான் உன்னை அழைக்க
ஒரு மாதமாயினும் உனக்கு ஓய்வு கொடுக்க
ஒரு வருடமாயினும் உன் பிறந்த நாளை மறக்காமல் இருக்க

உன்னுடன் ஒரே வீட்டில் வாழ
ஒரு முறையேனும் உனைக் காத்திருக்கவிடாமல் வீடு வர
என் மகளை நீ வளர்க்க
நீ அவள் வடிவில் நான் இறந்த பின்னும் இருக்க

ஆம் அம்மா, இதுபோல் எனக்கு இன்னும் ஆயிரம் ஆசைகள் உண்டு !

தேடல்

நான் தொலைக்காமலே தேடியது உன்னை !
அதில் தெரியாமலே தொலைத்தது என்னை !

நீ ஒளியவில்லை, இருப்பினும் கிடைப்பதுமில்லை !
நீ கிடைப்பதில்லை, இருப்பினும் நான் விடுவதுமில்லை !


நான் தேடுவதில் தோற்றாலும் நீ கிடைப்பதில் தோற்றாலும்
என் நாட்டமென்னவோ உன் மேல் தான் !

நீ என்னைக் கண்டுபிடித்தாலும் நான் உன்னைக் கண்டுபிடித்தாலும்
உன் நாணமென்னவோ என்னால் தான் !