Thursday, May 20, 2010

கடவுள்

யார் சொன்னது கடவுள் இல்லையென்று?


நான் பார்த்திருக்கிறேன் கடவுளை, நான் குறிப்பிடுவது "அன்பே வெங்கடாசலம்" கடவுளையல்ல.


மேலும் பத்து நிமிடம் தாமதாமானால், மிகப்பெரிய இழப்பு என்ற தருணத்தில், எட்டாவது நிமிடத்தில் தூர வளைவில் திரும்புமே அந்த வண்டி, அது கடவுள் ! 


தொடர்ந்து பத்து நாள் அரிசி உணவே உண்ணாமல், பதினொன்றாவது நாள் உண்ணும் அந்த சாதமும் சாம்பாரும், அது கடவுள் !


தொடர்ந்து நான்கு நாள் தண்ணீரே குடிக்காமல், பழச்சாறும் குளிர்பானமுமாய்க் குடித்து விட்டு ஐந்தாம் நாள் குடிக்கும் ஒரு குவளை தண்ணீர், அது கடவுள் !



மணிக்கணக்காய் வராமலிருந்து வெக்கை தாங்க முடியாமல் பச்சைக்குழந்தை அழும்போது திடீரென வந்து காற்றாடியை இயக்கும் அந்த மின்சாரம், அது கடவுள் !


தொடர்ந்து சில மணி நேரங்கள் இசையை ரசித்து விட்டு பின் அதை நிறுத்தியவுடன் நிகழும் சிறு அமைதி, அது கடவுள் !


காதலர்கள் மணிக்கணக்கில் வாய் கிழியப் பேசிக் கொண்டு இருக்கும்போது அவர்கள் இடையில் நிகழும் சில நொடி மெளனம், அது கடவுள் !



நமக்கு உலகிலேயே மிக முக்கியமான மனிதருக்கு, உயிர் காக்கும் உதவி புரிந்த ஒவ்வொன்றும் கடவுள் !




அவ்வளவு ஏன், இதை எழுதிய நானும் சரி படிக்கின்ற நீங்களும் சரி, யாரோ ஒருவருக்கு ஏதோவொரு சமயத்திலாவது கடவுளே ! 


பி.கு: இதைச் சிறுவரிகளாகவோ, கவித்துவமாகவோ எழுத முயற்சிக்கக்கூட இயலவில்லை. இதை ஒரு (உண்மைக்) கதையாகக் கருதவும். உலகே உணர்ந்தது என்பதால் இதில் தாயைச் சேர்க்கவில்லை.

No comments:

Post a Comment